மும்பை அருகே நங்கூரம் உடைந்ததால் மூழ்கத் தொடங்கிய கப்பலில் சிக்கித் தவித்த 11 ஊழியர்களை கடலோர காவல் படையினர் காப்பாற்றி கரைசேர்த்தனர்.
மும்பையில் இருந்து 1900 மில்லியன் இரும்பு துகள்களை ஏற்றிச் சென்ற எம்வி பிரியங்கா என்ற இந்திய வர்த்தக கப்பல், அலிபாக் அருகே உள்ள ரேவ்தண்டா துறைமுகத்திற்கு புறப்பட்டது. அதில் 16 ஊழியர்கள் இருந்தனர். துறைமுகம் அருகே நங்கூரம் போட்டு நிறுத்தப்பட்ட அந்த கப்பலில் நேற்று காலை திடீரென தண்ணீர் புகுந்ததால் மேற்கொண்டு செலுத்த முடியவில்லை.பாரம் தாங்காமல் நங்கூரமும் உடைந்துவிட்டது. இதனால் கப்பல் சாய்ந்து மெதுவாக தண்ணீரில் மூழ்கத் தொடங்கியது. பலத்தகாற்றுடன் மழை பெய்து கொண்டிருந்ததால் ஊழியர்கள் வெளியில் வர முடியாமல் தவித்தனர். இதுபற்றி கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கப்பலில் இருந்த 5 ஊழியர்கள் மட்டும் படகில் ஏறி கரைக்கு வந்தனர். தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டரில் சென்று கயிறு மூலம் கப்பலில் இருந்த 11 ஊழியர்களையும் மீட்டனர்.
மோசமான வானிலை, பலத்த காற்று மற்றும் இடைவிடாத மழை பெய்தபோதிலும் மீட்புக்குழுவினர் தைரியமாக செயல்பட்டு அரை மணி நேரத்திற்குள் அனைவரையும் காப்பாற்றினர். இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. கப்பல் மேலும் மூழ்காதவாறு நங்கூரம் போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
