மலையாளத்தில் மாபெரும் ஹிட்டாகிய த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக் படத்தின் பூஜை முடிந்தவுடன் இந்த படத்தில் நடிக்கும் மற்ற கலைஞர்களின் தேர்வு வெகுவிறுவிறுப்பாக நடந்து வருகிறது. மோகன்லால் வேடத்தில் கமல்ஹாசனும், மீனா நடித்த வேடத்தில் கவுதமியும் நடிக்க முடிவாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் பெண் போலீஸ் அதிகாரியின் வேடம் மிக முக்கியமானது. மலையாளத்தில் ஆஷாவும், தெலுங்கில் நதியாவும் நடித்த இந்த கேரக்டரில் நடிக்க இருக்கும் நடிகை குறித்து கமல்ஹாசனும் இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் ஆலோசனை செய்து வருகின்றனர்.இந்த கேரக்டரில் நடிக்க கமல்ஹாசன் ஸ்ரீதேவியை பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஸ்ரீதேவி 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் நடித்துள்ளதால், கமல்ஹாசனுக்காக அவர் இந்த படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. கடந்த 1982ஆம் ஆண்டு கமல்ஹாசனுடன் வாழ்வே மாயம் என்ற படத்தில் நடித்த பின்னர் மீண்டும் அவருடன் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை ஸ்ரீதேவி நடிக்க மறுத்துவிட்டால் இந்த கேரக்டரில் ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைக்க இயக்குனர் ஜீத்து ஜோசப் முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு கமல் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. சுரேஷ் பாலாஜி தயாரிக்க இருக்கும் த்ரிஷ்யம் ரீமேக், படத்தின் பாடல்களை நா.முத்துகுமார் எழுதுகிறார். விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தை அயூப்கான் எடிட்டிங் செய்கிறார். ரெம்போன் கலை இயக்குனராகவும், வசனகர்த்தாவாக எழுத்தாளர் ஜெயமோகனும், சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவாளராகவும் இந்த படத்தில் பணிபுரிய உள்ளனர்.
