கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே எம்.ஜி.ஆர். திட்டில் உள்ள ஓடையில் கடந்த 10–ந் தேதி 15 வயது மதிக்கத்தக்க சிறுமி நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். கிள்ளை போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.சம்பவ இடத்தில் பள்ளிக்கூட புத்தகப்பை, பள்ளி சீருடை, ரோஸ் நிறத்தில் ஒரு சுடிதாரும், பச்சை நிறத்தில் ஒரு சுடிதாரும், வெள்ளை நிறத்தில் ஒரு ஜோடி காலணி ஆகியவை கிடந்தன. அந்த பையில் இருந்த ரப்பரில், ‘செல்வி, 10–ம் வகுப்பு’ என்று எழுதியிருந்தது. இதன்மூலம் இறந்துகிடந்த சிறுமி, பள்ளி மாணவி என்பது தெரியவந்தது. இந்த தடயங்களை கைப்பற்றிய போலீசார், மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்த மாணவி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.
மாணவியை மர்மநபர் யாரோ ஆசைவார்த்தை கூறி, ஆள்நடமாட்டம் இல்லாத எம்.ஜி.ஆர். திட்டு பகுதிக்கு அழைத்துவந்து கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட மாணவியின் ஒரு உடையில், நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் தைக்கப்பட்ட முகவரி இருந்தது. அதன்பேரில் அந்த தையல்காரரிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் துணி தைக்க கொடுத்தது யார்? என்று தெரியவில்லை என கூறிவிட்டார். இதனால் மாணவி பற்றிய விவரம் கிடைப்பதில் போலீசுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள் மற்றும் பக்கத்து மாவட்ட போலீசாருக்கும் அனுப்பிவைக்கப்பட்டன. பிரேத பரிசோதனையில் மாணவியின் கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. எனவே அந்த மாணவி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது.
பள்ளி மாணவியை, காதல் வலைவீசி அழைத்துவந்தது யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடந்த எம்.ஜி.ஆர். திட்டு பகுதியில் சுனாமிக்கு பிறகு மக்கள் யாரும் வசிக்காததால், அதிக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாக மாறிவிட்டது. இதனால் இந்த இடம் தற்போது கள்ளக்காதலர்கள் மற்றும் இளம் ஜோடிகளின் உல்லாசபுரியாக மாறிவிட்டது.
எனவே அந்த மாணவியை காதல் போர்வையில் அழைத்து வந்தனரா? அல்லது கடத்தி வந்து கற்பழித்து கொலை செய்தனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உடல் கண்டெடுத்து 3 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இதுவரையில் இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து மர்மம் நீடித்து வருவதால் போலீசாரே பெரும் குழப்பத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.
