BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 2 August 2014

தெரிந்த முகத்திற்கு தேவையா விளம்பரம்?

ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற நடிகர்களுக்கு மட்டும் தான் தமிழ் சினிமா தலை வணங்குகிறது. இதேபோல் இவர்களுக்கு அடுத்த வரிசையில் உள்ள நடிகர்களான சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், ஆர்யா மேலும் ஒரு சில நடிகர்களின் படங்கள் நன்றாக இருக்குமா? ஓடுமா? ஓடாதா? என்று கூட விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் கொஞ்சம் கூட யோசிப்பது இல்லை,

இவர்களின் முகங்களுக்கு இருக்கும் வெளிச்சத்திற்காகவே பல திரையரங்குகளில் வெளியிடுகின்றனர்.பல கார்ப்பரேட் கம்பெனிகளின் வருகையால் நசிந்த சிறு தொழில் போல், இந்த மின்னும் நட்சத்திரங்களால் பல சின்ன பட்ஜெட் படங்கள் வெறும் ரீலாக பெட்டிக்குள் தூங்கி கொண்டிருக்கிறது. இதற்கு எல்லாம் மக்களின் ரசனையை காரணம் காட்டி இவர்கள் தப்பித்து விடுகிறார்கள்.இந்தியாவே வியந்து பார்க்கும் சூப்பர் ஸ்டாரும், உலக நாயகனும் ஒரு காலத்தில் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து தான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளனர் என்பதை அனைவரும் மனதில் கொள்ளவேண்டும்.ஏற்கனவே பிரபலமான ஒரு முகத்திற்கு ஏன் கோடிக்கணக்கில் செலவு செய்து ப்ரோமோஷன் செய்யவேண்டும், குறிப்பாக சாட்டிலைட் ரைட்ஸ் வாங்கிய தொலைக்காட்சிகள் அந்த படத்தின் ப்ரோமோஷன் செய்யும் போது நம்மை கோபத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும் வகையில் இருக்கும்.

சமீபத்தில் கூட பல பெரிய நடிகர்களின் படங்களின் வருகைக்காக தள்ளிப்போட்டு கிட்டத்தட்ட 2 மாதங்கள் கழித்து வெளிவருகிறது ஜிகர்தண்டா. இப்படத்தின் இயக்குனர் தமிழ் சினிமாவையே அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற பீட்ஸா என்ற படைப்பை உருவாக்கியவர். அவருக்கே இந்த நிலைமை என்றால், மற்றவர்களின் நிலைமையை நீங்களே யோசித்து பாருங்கள்.இது மட்டுமின்றி மூடர்கூடம், தங்கமீன்கள், ஆதலால் காதல் செய்வீர் போன்ற தரமான படங்களே வெளிவர முடியாமல், பல பேரின் கண்ணீல் பட்டு, ஏதோ நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களின் பார்வையில் பட்டதால் தான் திரைக்கு வந்தது.வந்து என்ன பயன், தரமற்ற பல படங்களுக்கு கதாநாயகன் என்ற ஒரு வார்த்தைக்காக ஜவுளிக்கடை விளம்பரம் போல் ப்ரோமோஷன் செய்வோர் மத்தியில் இந்த படங்கள் வெற்றி பெற்றிருந்தால் தான் ஆச்சரியம்.இங்கு எல்லோரும் பணத்திற்காக தான் படம் எடுக்கிறார்கள், அதிலும் சினிமாவை வாழ வைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் படம் எடுப்பவர்கள் சிலர், அந்த சிலரும் காற்றில் பறக்கும் காகிதமாக, திசை தெரியாமல் பறந்து கொண்டிருக்கின்றனர்.தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு கொண்டு செல்லவேண்டும் என்றால், கதாநாயகர்களை தவிர்த்து கதையின் நாயகர்களாக நடிப்பவர்களை ஊக்குவித்தால் தான் சாத்தியம். தமிழ் மக்கள் என்றும் புதிய முயற்சியை வரவேற்பார்கள். அதனால் இந்த காகிதங்களை நூல் படித்து பட்டங்களாக பறக்க வைப்பது தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் கையில் தான் உள்ளது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies