மும்பையில் நேற்று மாலை திடீரென கனமழை பெய்ய ஆரம்பித்தது. விடாது பெய்த கனமழையால் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் மும்பையில் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே அப்படியே நின்றது. இதனால் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டு வீட்டுக்குச் செல்லும் மக்கள் பல மணி நேரம் ரயிலில் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
கனமழையால் அந்தேரி கிழக்குப் பகுதியில் 45 வயது பெண் ஒருவர் சாக்கடையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதே போன்று கொபோலி நீர்வீழ்ச்சியில் சிக்கி ஒரு பெண்ணும், கல்யான் பகுதியில் மின்னல் தாக்கி இரண்டு பேரும் மழையின் போது உயிரிழந்தனர். மும்பை முழுக்க 5 மணி நேரம், அதாவது மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை விடாது பெய்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது.
பாந்த்ரா-குர்லா காம்ப்ளசில் இருந்து வெறும் 3 கிலோமீட்டர் தூரத்தை காரில் கடக்க 3 மணி நேரம் வரை பிடித்ததாக வாகன ஓட்டிகள் குறைபட்டுக்கொண்டனர். சில வாகனங்கள் ஆங்காங்கே அப்படியே சாலையோரம் நின்றது. மான்கூர்டு பகுதியில் மட்டும் 5 மணி நேரத்தில் 276 மி.மீ., அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. கனமழையால் விமான போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மும்பை வரவேண்டிய 14 விமானங்கள் வேறு விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டது.
மும்பை விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழையால் அந்தேரி சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்திற்கு மூடப்பட்டது. அதோடு எல்.பி.எஸ்.மார்க், குர்லா போன்ற பகுதியில் சாலைகளில் மழை நீர் தேங்கி வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாலையில் அலுவலகத்திலிருந்து வீட்டிற்குக் கிளம்பிய அனைவரும் நடுவழியில் பல மணி நேரம் நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். நாகூர், காஞ்சூர் மார்க், பாண்டூப் ரயில் நிலைய தண்டவாளத்தில் பல அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியதால் மத்திய ரயில்வேயில் ரயில் போக்குவரத்து தடைப் பட்டது. இரவு 9 மணிக்குப் பிறகுதான் ரயில் போக்குவரத்து படிப்படியாகத் தொடங்கியது. மும்பை ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மான்கூர்டு மற்றும் கோவண்டி ரயில் நிலையங்கள் இடையே தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் ஹார்பர் லைனிலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலைமோதியது. இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருப்பதால் மும்பை, தானே பகுதியிலுள்ள கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
