மும்பையில் ராகுல் காந்தி பிரசாரம்...
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தை பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று தொடங்கி வைத்தார். முதலில் விதர்பாவிற்கு உள்பட்ட நாக்பூர் போன்ற இடங்களில் உரையாற்றிவிட்டு இரவில் மும்பையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இதில் ராகுல் காந்தி வாக்காளர்கள் மற்றும் பெண்களை கவர 5 வாக்குறுதிகளை வழங்கினார்.
பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்..
ஆளும் பா.ஜ.க கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தற்போது கொடுக்கும் ரூ.1500ஐ அதிகரித்து 2100 ஆக கொடுப்போம் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். ஆனால் ராகுல் காந்தி தங்களது அரசு ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
பஸ்களில் இலவசமாக பயணம்
அதோடு, மகாலட்சுமி என்ற திட்டத்தின் கீழ் பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என்றும், குடும்பத்திற்கு ரூ.25 லட்சத்திற்கு இன்சூரன்ஸ் செய்யப்படும், இதன் மூலம் இலவச மருந்துகளும் வழங்கப்படும் என்றும் ராகுல் காந்தி அறிவித்தார்.

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி
அதோடு, விவசாயிகளுக்கு 3 லட்சம் வரையிலான கடன் தள்ளுபடி செய்யப்படும். கடனை சரியாக திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், இடஒதுக்கீட்டுக்கு தற்போது இருக்கும் 50 சதவீத உச்ச வரம்பு நீக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு மாதம் 4 ஆயிரம்
ராகுல் காந்தி மேலும் பேசுகையில், ''படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் 4 ஆயிரம் வழங்கப்படும். அரசு நிர்வாகம், பல்கலைகழகம் மற்றும் நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது. நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை ஆய்வு செய்தால் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்-காரர்களாக இருப்பார்கள். இந்த நிலையை நாங்கள் மாற்றுவோம். மகாராஷ்டிராவில் இரண்டு தொழிலதிபர்கள் பயனடையவேண்டும் என்பதற்காக மகாவிகாஷ் அகாடி அரசு கவிழ்க்கப்பட்டது. நரேந்திர மோடி அரசு அதானியிடம் சரணடைந்துவிட்டது. தாராவியில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் அதானியிடம் வழங்கப்பட்டுள்ளது.
குஜராத்திற்கு தொழிற்சாலைகள் மாற்றம்...
ஐபோன் தொழிற்சாலை, டாடா ஏர்பஸ், செமி கண்டக்டர் தொழிற்சாலைகள் மகாராஷ்டிராவில் இருந்து குஜராத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் 5 லட்சம் வேலை வாய்ப்பு பறிபோய் இருக்கிறது. இதன் மூலம் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மகாராஷ்டிரா அரசின் நலனை பற்றி கவலைப்படாமல் அதானிக்காக செயல்படுகிறது.
பெண்கள் மற்றும் விவசாயிகளுக்காக உதவி செய்வதாக கூறும் அரசு ஏழைகள் மீது கடுமையாக வரி விதிக்கிறது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உட்பட நரேந்திர மோடி அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையும் ஏழைகளுக்கு இழப்பை ஏற்படுத்துவதாகவும், பணக்காரர்கள் பயனடையும் வகையிலும் இருக்கிறது''என்றார்.

அதானியின் டெண்டர்கள் ரத்து செய்யப்படும் - உத்தவ் தாக்கரே
இக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு பேசுகையில், ''அதானி மும்பை முழுவதும் இருக்கும் நிலத்தை அபகரித்துக்கொண்டார். வேலையில்லா திண்டாட்டம் அதிமாக இருப்பதால் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். மகாவிகாஷ் அகாடி ஆட்சிக்கு வந்தால் தாராவி குடிசைமாற்றுத்திட்டத்தை ரத்து செய்வோம். அதானி நிறுவனம் தொடர்புடைய அனைத்து டெண்டர்களும் ரத்து செய்யப்படும்''என்றார்.
இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவாரும் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக ராகுல் காந்தி நாக்பூரில் பேசுகையில், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க மக்களின் எதிர்ப்பை சந்திக்கவேண்டி வரும் என்று கருதி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவதில்லை. அவர்களின் ரகசிய நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பலவீனப்படுத்துகிறது. ஆர்.எஸ்.எஸ். அரசியல் சாசன கொள்கைகளை எதிர்த்தால் எங்களது எதிர்ப்பை எதிர்கொள்ளவேண்டி வரும் என்று தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
