தமிழ்த் தொலைக்காட்சி ஏரியாவில் பிக்பாஸ் பேச்சு ஆரம்பமாகி விட்டது. அக்டோபர் 6ம் தேதி சீசன் 8 தொடங்கவிருக்கும் சூழலில் பிக்பாஸ் 6 வது சீசனில் ரன்னராக வந்தவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளராகவும் இருக்கும் விக்ரமனைச் சந்தித்தோம்.
''பிக் பாஸ் சீசன் 6 ன் முடிவை இப்போது வரை உங்களது ஆதரவாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்கிறார்களே?
''அந்த சீசனின் ரிசல்ட் குறித்து இப்போதும் பேச்சு போய்க் கொண்டு இருக்குன்னு எனக்குத் தெரியும். அதைப் பத்தி நான் என்ன சொல்வது? ஆனா எனக்கு டைட்டில் கிடைக்காததற்குக் காரணம் ஓட்டு கிடைக்கலைங்கிறதுதான். அந்த நிகழ்ச்சியைப் பார்த்த மக்கள் நிறைய பேருக்கு என்னைப் பிடித்தது. எல்லாருமே எளிய, கிராமப்புறங்களைச் சேர்ந்தவங்க. அவங்களுக்கு ஹாட் ஸ்டார் ஆஃப்பில் போய் எப்படி ஓட்டுப் போடணும் எல்லாம் தெரியாது. அதனால ஆதரவு எல்லாம் ஓட்டா கிடைக்கலை. சில நிகழ்ச்சிகள்ல மிஸ்டு கால் கொடுத்து பங்களிப்பு செய்கின்ற ஆப்ஷன் இருக்கும். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அப்படியொரு ஆப்ஷன் இருந்தா நல்லா இருக்குங்கிறது என் கருத்து. வரும் சீசனிலாவது அப்படியொரு ஆப்ஷன் வச்சா நிகழ்ச்சி பார்க்கிற எல்லோராலும் ஓட்டுப் போட முடியும்''
அப்போது உங்களுக்கு ஆதரவா தொல்.திருமாவளவன் ஓட்டு கேட்டது விமர்சனத்துக்குள்ளாச்சே.. அதுவும் கூட உங்கள் தோல்விக்குக் காரணமா அமைந்திருக்கலாம் என்று கூட பேசப்பட்டதே?
''இது ஒரு கேம் ஷோ. இதுல போய் அவர் ஓட்டு கேட்டது தப்புன்னு விமர்சிச்சாங்க. தலைவருக்குமே இது ஒரு கேம் ஷோன்னு தெரியும். அப்படியிருந்தும் ஓட்டு கேட்டார்னா அதுல ஒரு அர்த்தம் இருக்காதா? பிக் பாஸ் வீட்டுக்குள் நான் சார்ந்த கட்சியின் கொள்கைகளைப் பேசினேன். அம்பேத்கர், பெரியாரைப் பேசினேன். இது பிடிக்காத சில சக்திகள் வெளியிலிருந்து எனக்கெதிராய் சில விஷயங்களைப் பண்ணினாங்க. அதைத் தெரிஞ்சுகிட்டுதான் எனக்கு ஆதரவாக பேசினார் தலைவர். எனக்கு டைட்டில் கிடைக்காததுல அந்த சக்திகளுக்கு முக்கிய பங்கிருக்கு. அதாவது அசீமுக்குக் கிடைத்த வாக்குகள் எல்லாம் அவர் ஜெயிக்கணும்னு கிடைச்சதுன்னு சொல்வதைக் காட்டிலும் நான் தோக்கணும்னு நினைச்சவங்களால் கிடைச்சதுன்னுதான் சொல்வேன்''
பிக் பாஸ் போனது தவறான முடிவென போய் வந்த பிறகு சொல்றாங்க. உங்களுக்கு எப்படி?
''நிச்சயம் அப்படி சொல்ல மாட்டேன். நல்லதொரு அனுபவம் கிடைக்கக் காரணமாக இருந்தது அந்த நிகழ்ச்சி. இன்னும் சொல்லணும்னா என்னைச் செழுமைப்படுத்த உதவுச்சு. ஏன்னா பலதரப்பட்ட குணங்களைக் கொண்ட மனிதர்களை ஒரே இடத்தில் சந்தித்து, அவர்களுடன் பழகும் வாய்ப்பைத் தந்தது. பிக் பாஸ் போறதுக்கு முன்னாடி நான் கொஞ்சம் இறுக்கமானவனா இருந்தேன். இப்ப அந்த இறுக்கம் குறைந்து கொஞ்சம் ஜாலியான மனுஷனா மாறத் தொடங்கியிருக்கேன்.
விடுதலைச் சிறுத்தைகள் திமுக இடையிலான பிரச்னை சரியாயிடுச்சா?
''சரியாயிடுச்சு... தலைவர் சொல்லிட்டாரே. சிலர் ஆர்வக் கோளாறாலும் அரசியல் புரிதல் இல்லாமலும் செயல்பட்டதால் உண்டான சலசலப்பு முடிஞ்சுடுச்சு.
கமலுக்கு பதில் விஜய் சேதுபதி வந்திருக்கார். எட்டாவது சீசன் எப்படியிருக்கும்னு நினைக்கிறீங்க?
''கமல் சார் ஒரு ஸ்டைல்ல கொண்டு போனார். அந்த வீட்டுக்குள் இருக்கிற போட்டியாளர்களுக்கு ஒரு பிரச்னைன்னாலும் குரல் கொடுக்கிறவரா இருந்தார் அவர். ஒருமுறை எங்களுக்கு அங்க சரியான சாப்பாடு கிடைக்கலை. 'இந்தப் பிரச்னையைச் சரி செய்யுங்க, இல்லாட்டி என் சம்பளத்திலிருந்து நானே பண்றேன்னு சொன்னார். விஜய் சேதுபதி எப்படிக் கொண்டு போவார்ங்கிறதை நிகழ்ச்சி தொடங்கினாதான் சொல்ல முடியும்''
அடுத்து என்ன திட்டம் வச்சிருக்கீங்க? தீவிர அரசியலா, சினிமாவா?
அரசியல்ல நான் படிக்கிற காலத்துல இருந்தே இருக்கேன். அதனால அதைத் தவிர்க்க முடியாது. சினிமாவுக்கு இப்ப புதுசா வந்திருக்கேன். ஹீரோவா நடிச்சிருக்கிற படம் குறித்த அறிவிப்பு முறைப்படி சீக்கிரத்துல வரும். பெரிய பேனர் தயாரிக்கிற அந்தப் படம் ரொமான்ஸ், காமெடின்னு கலவையான ஒரு ஜானர்ல இருக்கும்
