பண்டிகைக் காலம் வந்துவிட்டது... கிரேட் இன்டியன் சேல், பிக் பில்லியன் சேல் என ஆன்லைன் ஸ்டோர்களில் சலுகைகளும், தள்ளுபடிகளும் வரிசைக்கட்டி நிற்கும். 'இது தான் சான்ஸ்' என்று வாங்கி குவிக்காமல், பிளான் செய்து வாங்கினால் இந்த ஷாப்பிங்கை லாபகரமானதாக மாற்றலாம்.
அதற்கு ஃபாலோ செய்ய வேண்டிய டிப்ஸ்கள்...
பட்ஜெட்: எந்த ஷாப்பிங்காக இருந்தாலும் பட்ஜெட் என்பது மிக முக்கியமான விஷயம். 'ஆஃபர் கிடைக்குதே' என்று பார்த்ததை எல்லாம் வாங்கக்கூடாது. 'இவ்வளவு தான் நம் பட்ஜெட்' என்று முடிவு செய்துக்கொண்டு வாங்குவது தான் புத்திசாலி தனம்.
ஒப்பீட்டு பாருங்கள்: பார்த்த முதல் ஆப்பிலேயே கண்ணை மூடிக்கொண்டு வாங்கிவிடாதீர்கள். ஒவ்வொரு ஆப்களுக்கு ஏற்ப பொருட்களின் விலை, டெலிவரி சார்ஜ் ஆகியவை மாறுபடும். அதனால் எந்த ஆப்பில் என்ன விலை என்பதை ஒப்பிட்டு பார்த்து வாங்குங்கள்.
ரிவ்யூ மற்றும் ஃபீட்பேக்: பணத்திற்கு அடுத்தது 'தரம்'. 10 ரூபாயிற்கு வாங்கினாலும் சரி...லட்ச ரூபாயிற்கு வாங்கினாலும் சரி... தரம் என்பது மிக மிக முக்கியம். ஒரு பொருளை ஆர்டர் செய்து வந்தப்பிறகு அதன் தரத்தை தெரிந்துக்கொள்ள வேண்டியதில்லை. ரிவ்யூ மற்றும் ஃபீட்பேக் மூலமே பொருளின் தரத்தை தெரிந்துக்கொள்ளலாம். அதனால் ஆர்டர் செய்வதற்கு முன்னால், ரிவ்யூவை படித்துவிடுங்கள்.
போலிகள் ஜாக்கிரதை: 'நம்ம ஃபிரண்டு வெச்சுருக்காங்க', 'அந்தப் பொண்ணு போட்டிருந்தாங்க' என்று எதாவது ஆர்டர் செய்வீர்கள். ஆனால் அதே மாதிரியான டிரஸ்ஸோ, பொருளோ ஆயிரக்கணக்கில் ஆப்களில் கொட்டிக் கிடக்கும். அதில் எது ஒரிஜினல் பிராண்ட், தரமானது என்று சரிபார்த்து ஆர்டர் செய்யுங்கள்.
ரிட்டன் பாலிசி: எந்தப் பொருளை வாங்குவதற்கு முன்பும், அதை ரிட்டன் செய்யலாமா? அதற்கான கண்டிஷன்கள் எவை? என்பதைப் படித்து தெரிந்துக்கொள்வது அவசியமானது.
கவனம் தேவை: 'அழகாக இருக்கிறது', 'பிடித்திருக்கிறது' என்று நினைத்து வாங்காமல், அந்தப் பொருளை வாங்கினால் உங்கள் தேவை பூர்த்தி ஆகுமா? என்பதைப் பார்த்து வாங்குங்கள்.
வாங்காதீர்கள்: இப்போதைக்கு தேவையில்லை என்று தோன்றும் பொருள்களை வாங்கவே வாங்காதீர்கள். இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் டிரண்ட் மாறும். அதனால் நீங்கள் இப்போது வாங்கும் பொருள், உங்களுக்குத் தேவைப்படும்போது பழைய மாடல் ஆகி இருக்கும். அதனால் ஜாக்கிரதை.
எதையும் வாங்காதீர்கள்: 'பிடித்திருக்கிறது' என்று எந்தத் தேவையில்லாத பொருளையும் வாங்கவே வாங்காதீர்கள்.
இப்படி பணம் கட்டுங்கள்: சில ஆப்களில் பொருள்கள் வாங்கும்போது, இந்த பேமெண்ட் ஆப்பில் காசு கட்டினால் சலுகை, இந்த கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் தள்ளுபடி போன்ற சலுகைகள் இருக்கும். இதை கவனமாக கவனித்து ஆஃபர்கள் பெறுங்கள்.
கிஃப்ட் கார்டை பாருங்கள்: உங்களிடம் கிஃப்ட் கார்டு இருந்தால், 'அதில் வைத்து என்னென்ன வாங்கலாம்?', 'எவ்வளவு ரூபாய்க்கு வாங்கலாம்?' ஆகியவற்றில் தெளிவாக தெரிந்துகொண்டு ஷாப்பிங் செய்யுங்கள்.
இது ரொம்ப முக்கியம்: செலவை குறைப்பது, பொருளை தேர்ந்தெடுப்பதில் எவ்வளவு மெனக்கெடுகிறோமோ, அதே அளவுக்கான மெனகெடல்களை ஆப்பை தேர்ந்தெடுப்பதிலும் செய்ய வேண்டும். 'கம்மி விலை, அதிக தள்ளுபடி' என்று எதாவது ஆப்பில் பொருள்களைத் தேர்வு செய்யவே செய்யாதீர்கள். எந்த ஆப்பில் தரமான பொருள், சரியான ரிட்டன் பாலிசி, சூப்பரான ஆஃபர் திட்டங்கள் கிடைக்கிறதோ... அந்த ஆப்பைத் தேர்ந்தெடுங்கள்.
ஹேப்பி ஷாப்பிங் மக்களே:)
