கால்சியம், விட்டமின் டி3 மாத்திரைகள், நீரிழிவு நோய் மாத்திரைகள், இரத்த உயர் அழுத்த மாத்திரைகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட மாத்திரைகள் தரச் சோதனையில் தோல்வியடைந்திருக்கின்றன.
மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் இந்த மாதத்துக்கான மருந்துகள் எச்சரிக்கை வரிசையில் 53 மாத்திரைகள் சரியான தரத்தில் இல்லை ( "Not of Standard Quality (NSQ) Alert.") என எச்சரித்துள்ளது.
இந்த NSQ வரிசையானது அரசு மருந்து அதிகாரிகளால் மாதாமாதம் குத்துமதிப்பாக (Random) மாத்திரை மாதிரிகளைத் தேர்ந்தெடுத்துச் சோதிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றது.
ஷெல்கால் வைட்டமின் சி மற்றும் டி3 மாத்திரைகள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் சி சாப்ட்ஜெல்ஸ், ஆன்டிஆசிட் பான்-டி (antiacid Pan-D), பாராசிட்டமால் ஐபி 500 மி.கி மாத்திரைகள், Glimepiride நீரிழிவு எதிர்ப்பு மருந்து, டெல்மிசார்டன் (Telmisartan) உயர் இரத்த அழுத்த மருந்து மற்றும் பல அதிகம் விற்பனையாகும் மருந்துகள், மருந்து கட்டுப்பாட்டாளரின் தரச் சோதனையில் தோல்வியடைந்தது.
இந்த மருந்துகள், ஹெட்டோரோ மருந்துகள் (Hetero Drugs), அல்கெம் ஆய்வகங்கள் (Alkem Laboratories), ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் லிமிடெட் (HAL), கர்நாடக ஆண்டிபயாடிக்ஸ் & பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட், மெக் லைஃப் சயின்சஸ், ப்யூர் & க்யூர் ஹெல்த்கேர் உள்ளிட்ட நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை.
குற்றம்சாட்டப்படும் ஆய்வகங்கள் சோதிக்கப்பட்ட மருந்துகள் தங்கள் தயாரிப்பு இல்லை என்றும், போலியானவை என்றும் கூறி, குற்றச்சாட்டை மறுக்கின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, இந்தியச் சந்தையில் விற்கப்பட்டு வந்த 156 மருந்துகளை "மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்" எனக் கூறி தடை செய்தது. இந்த மருந்துகளில் பிரபலமான வலி நிவாரணிகள், காய்ச்சல் மாத்திரைகளும் அடங்கும்.
