Doctor Vikatan: எனக்கு சமீபத்தில்தான் பிரசவம் ஆகியிருக்கிறது. இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். என்னால் இரண்டு குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கொடுக்க முடியுமா என பயமாக இருக்கிறது. எனக்கு அந்த அளவுக்கு தாய்ப்பால் சுரப்பு இருக்குமா என்ற எண்ணமே ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்துகிறது. அதேபோல குழந்தைகளுக்கு உட்கார்ந்த நிலையில் மட்டும்தான் பால் கொடுக்க வேண்டுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த அம்மாக்களுக்கும் தாய்ப்பால் போதுமான அளவு இருக்கும். ஆனால், இரண்டு குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கொடுத்து இரண்டுமே உடல் எடையில் முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும். இரட்டைக் குழந்தைகளைப் பொறுத்தவரை, சிலர், நிறை மாதத்துக்கு முன்பே பிறக்கலாம். அப்படிப் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் போதாமல் இருக்கலாம்.
அதேபோல குழந்தை பெற்ற பெண் ஸ்ட்ரெஸ்ஸில் இருந்தாலோ, சரியாகத் தாய்ப்பால் கொடுக்கத் தெரியாதவராக இருந்தாலோ தாய்ப்பால் போதவில்லை எனக் கவலைப்படாமல், பாட்டில் பால் கொடுக்க ஆரம்பிக்கலாம். ஆனால், பெரும்பாலும் அதற்குத் தேவை இருக்காது. எல்லா பெண்களுக்கும் போதுமான அளவு தாய்ப்பால் சுரக்கும். குழந்தை பாலை உறிஞ்ச, உறிஞ்சத்தான் தாய்ப்பால் சுரப்பும் அதிகரிக்கும். தாய்ப்பால் சுரப்பு குறித்து ஸ்ட்ரெஸ்ஸுக்கு ஆளானால், அதுவே தாய்ப்பால் சுரப்புக்குத் தடையாகும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
சிறிய வயதில் திருமணமாகி, குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது எப்படி என்பது சரியாகத் தெரியாமலிருக்கலாம். அப்படிப்பட்ட பெண்கள் உட்கார்ந்த நிலையில் பால் கொடுப்பதுதான் சரியானது, பாதுகாப்பானதும்கூட.
படுத்தநிலையில் தாய்ப்பால் கொடுக்கும்போது, ஒருவேளை அசதியில் அம்மா தூங்கிவிடலாம். குழந்தையும் பால் குடிக்கும்போது, பாலானது அதன் வயிற்றுக்குள் போகாமல், மூச்சுக்குழாய்க்குள் சென்றுவிடும் ஆபத்தும் இருக்கிறது. குழந்தை இருமலாம், அதை அம்மா கவனிக்காமல் போகலாம். அதெல்லாம் பிரச்னையில் முடியலாம். அதனால் குழந்தை பெற்ற புதிதில் முதல் சில மாதங்களுக்கு உட்கார்ந்த நிலையில் பால் கொடுப்பதுதான் சிறந்தது. அந்த லாகவம் பிடிபட்ட பிறகு தாய்ப்பால் கொடுக்கும் பொசிஷனை மாற்றினாலும் பிரச்னையில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
